என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போக்குவரத்து நெரிசல்"
- கடந்த 4 நாட்களுக்கு முன்பு போலீசார் இந்த இரும்பு தடுப்புகளை அப்புறப்படுத்தும் படி அறிவுறுத்தினர்.
- கல்குவாரி இருப்பதால் இச்சாலையில் லாரிகள், ஜே.சி.பி. உள்பட கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்கின்றன.
மீனம்பாக்கம் சுரங்கப்பாதையில் இருந்து மூவரசம்பேட்டை வரை செல்ல பி.வி. நகர் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை ஜி.எஸ்.டி சாலையில் இருந்து மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி, நங்கநல்லூர், பழவந்தாங்கல், மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை, திரிசூலம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வழியாகவும், ஒரு மாற்றுப்பாதையாக உள்ளது.
பழவந்தாங்கலில் பி.வி.நகர் காமராஜர் சாலை - என்.ஜி.ஓ காலனி சந்திப்பில் டி.ஜி.கியூ.ஏ. கேந்திர வித்யாலயா பள்ளி உள்ளது. இதன் எதிரே உள்ள பாதாள சாக்கடை மூடி சில வாரங்களுக்கு முன்பு பழுதடைந்தது. அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு அதை குடிநீர் வாரிய ஊழியர்கள் புது மூடி அமைத்து சரி செய்தனர். மேலும் அதில் வாகனங்கள் எதுவும் சென்று விடாமல் இருப்பதற்காக அதன் பக்கவாட்டில் இருபுறமும் இரும்பு பலகை தடுப்பு அமைத்தனர்.
இந்த பணிகள் முடிந்து சுமார் 15 நாட்களுக்கு மேலாகியும் சாலை நடுவே இருந்து இரும்பு தடுப்பு அகற்றப்படாமல் இருப்பதால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி-கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும் மூவரசம்பேட்டை - திரிசூலம் பகுதியில் கல்குவாரி இருப்பதால் இச்சாலையில் லாரிகள், ஜே.சி.பி. உள்பட கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்கின்றன.
இதனால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு போலீசார் இந்த இரும்பு தடுப்புகளை அப்புறப்படுத்தும் படி அறிவுறுத்தினர். ஆனால் இதுவரை யாரும் இதை எடுக்கவில்லை. உடனடியாக கட்டிடக்கழிவுகள், இரும்பு தடுப்புகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கொடைக்கானலுக்குள் நுழையும் முன்பு பயணிகளிடம் இ-பாஸ் சோதனை.
- சோதனை சாவடிகளிலேயே சோதனை.
கொடைக்கானல்:
ஊட்டி, கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் அளவுக்கு அதிகமான சுற்றுலா வாகனங்கள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க கடந்த மே7-ந் தேதி முதல் செப்டம்பர் 30ந் தேதி வரை உயர் நீதிமன்ற உத்தரவுபடி இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்தும் இங்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி இ-பாஸ் அனுமதி குறித்து கொடைக்கானல் நகருக்குள் நுழையும் முன்பு பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்து இ-பாஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
இ-பாஸ் பெறாத வாகனங்கள் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. வார விடுமுறை காரணமாக காலை முதலே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பல்வேறு வாகனங்களில் வந்தனர்.
இ-பாஸ் மற்றும் வழக்கமான சோதனைக்கு போதிய பணியாளர்கள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
மேலும் 5 லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒவ்வொரு பாட்டிலுக்கும் தலா ரூ.20 பசுமை வரி வசூலிக்கப்பட்டது.
இதனால் வெள்ளி நீர் வீழ்ச்சி அருேக உள்ள சுங்கச்சாவடியில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இ-பாஸ் பெறாமல் வந்த வாகனங்களை சுங்கச்சாவடி அருகிலேயே நிறுத்தி சோதனை செய்ததால் மற்ற வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இ-பாஸ் குறித்து தெரியாமல் வந்த சுற்றுலாப் பயணிகள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அவர்களிடம் இ-பாஸ் பெறுவது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
மலைச்சாலையில் இ-பாஸ் சோதனை செய்வதால் குறுகிய இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வத்தலக்குண்டு அருகே உள்ள காட்ரோடு மற்றும் காமக்காபட்டி சோதனைச்சாவடியிலும், பழனி அடிவார பகுதியிலும் கொடைக்கானல் வருவதற்கு முன்பே சுற்றுலாப் பயணிகளிடம் இ-பாஸ் சோதனை மேற்கொண்டால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.
மேலும் நேர விரையமும் தவிர்க்கப்படலாம். எனவே அடிவாரப்பகுதியில் உள்ள சோதனை சாவடிகளிலேயே சோதனை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- நேற்று இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளின் மூலம் 79,626 பேர் பயணம் செய்துள்ளனர்.
- செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனால் பேருந்து நிலையம், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
குறிப்பாக தென்மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சென்னை நோக்கி படையெடுத்ததால், செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதே போல ஒரே நேரத்தில் அதிக அளவில் பயணிகள் வருகை தந்துள்ளதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக சொந்த ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் சென்னை திரும்பும் பொருட்டு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கினர். இதனால், பஸ் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
நேற்று இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளின் மூலம் 79,626 பேர் பயணம் செய்துள்ளனர். முன்பதிவு செய்து பயணித்த பயணிகளின் எண்ணிக்கையில் இது அதிகபட்ச உச்சமாகும். சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 2,561 சிறப்புப் பேருந்துகளும், பல்வேறு இடங்களிலிருந்து வழக்கமாக இயங்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 3,912 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
- சொந்த ஊர்களில் இருந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
- பேருந்து நிறுவனங்கள் சார்பிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை நாட்களாக அமைந்தது. இதையொட்டி வெளி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கடந்த புதன் கிழமை முதலே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் மக்கள் சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழ்ந்தனர். தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் சொந்த ஊர்களில் இருந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
இதன் காரணமாக பஸ், ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை நோக்கி செல்லும் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பிலும், தனியார் பேருந்து நிறுவனங்கள் சார்பிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாடிவிட்டு, சென்னை நோக்கி வாகனங்கள் படையெடுத்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகனங்களை 8 வழிகளில் காவல்துறையினர் அனுப்பி வைக்கின்றனர். உளுந்தூர்பேட்டை,விக்கிரவாண்டி, பரனூர் சுங்கச் சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. அணிவகுத்து நிற்பதால், வாகனங்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.
- திட்டத்துக்கான டெண்டரை மாநில நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது.
- 2 ஆண்டுகளுக்குள் இந்த சாலை செயல்பாட்டுக்கு வரும்.
சென்னை:
சென்னையில் மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வருவதால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை நகரம் முழுவதும் புதிய இணைப்பு சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 3 இடங்களில் புதிய இணைப்பு சாலைகள் அமைக்கப்படுகின்றன.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மெட்ரோ ரெயில் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை முழுவதும் புதிய இணைப்பு சாலைகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பாடிக்குப்பம் மெயின் ரோடு - பிள்ளையார் கோவில் தெரு இடையே 900 மீட்டர் தொலைவுக்கு இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது.
இதன் மூலம் பூந்தமல்லி மற்றும் மதுரவாயல் நோக்கி செல்லும் வாகனங்கள், நெரிசல் மிகுந்த ஜவஹர்லால் நேரு சாலையை எளிதாக கடந்து செல்ல முடியும். இந்த சாலை விரிவாக்க திட்டத்தால், ரெயில் நகர் பாலம் வழியாக, பூந்தமல்லி உயர் மட்ட சாலைக்கு வாகன ஓட்டிகள் செல்ல முடியும்.
மற்றொரு இணைப்பு சாலையானது ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைகிறது. இந்த இணைப்பு சாலையானது, டி.ஜி.எஸ்.தினகரன் சாலையை, துர்காபாய் தேஷ்முக் சாலையுடன் இணைக்கும்.
இதன் காரணமாக மயிலாப்பூர், கிரீன்வேஸ் சாலை மற்றும் சாந்தோம் வழியாக செல்லும் வாகனங்கள் அடையாறு மற்றும் கிண்டியை மாற்று பாதையில் சென்று அடையலாம். ரூ.37.8 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டத்துக்கான டெண்டரை மாநில நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது.
இந்த 630 மீட்டர் இணைப்பு சாலை பணிகள் முடிந்ததும், துர்காபாய் தேஷ்முக் சாலை நடுவில் உள்ள தடுப்பு அகற்றப்பட்டு, ஒருவழி போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்படும்.
இந்த 2 இணைப்பு சாலை திட்டங்களையும் ஒரு வருடத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3-வது இணைப்பு சாலை, தற்போது பகுதி அளவில் பயன்பாட்டில் உள்ளது, இந்த சாலையானது பரங்கிமலை - மவுண்ட் பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தற்காலிகமாக செயல்பாட்டில் உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த சாலை முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடுரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து.
- கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கம்மத்தில் இருந்து பிரகாசம் மாவட்டத்திற்கு உயிர் உள்ள மீன்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது.
மெகபூபாபாத் தேசிய நெடுஞ்சாலையில் மரிபெடா என்ற இடத்தில் சென்ற போது திடீரென நடுரோட்டில் கவிழ்ந்தது. விபத்தில் லாரியில் உயிருடன் இருந்த மீன்கள் சாலை முழுவதும் துள்ளி குதித்தன.
இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் ஓடிச்சென்று மீன்களை பிடித்தனர். அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் இருந்து சாக்கு பைகள் மற்றும் பாத்திரங்களைக் கொண்டு வந்து துள்ளி குதித்த மீன்களை போட்டி போட்டு அள்ளி சென்றனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீன்களை அள்ளிக் கொண்டிருந்த பொதுமக்களை விரட்டி அடித்தனர்.
பின்னர் விபத்தில் சிக்கிய லாரியை மீட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- புளிஞ்சூர் சோதணை சாவடியில் இருந்து பண்ணாரி வரை 40 நிமிடத்தில் கடக்க வேண்டிய தொலைவை தற்போது 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை இந்த பாதையை கடக்க முடிகிறது.
- தினம் தினம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த மலைப்பாதை தமிழக, கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய போக்குவரத்து பகுதியாகும். இந்த வழித்தடத்தில் வனவிலங்குகள் வாகனத்தில் மோதி உயிரிழப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதைத்தொடர்ந்து 2022 ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து இந்த தடை அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 6 மணி முதல் காலை வரை பண்ணாரி சோதனை சாவடியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
காலை 6 மணிக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் திம்பம் மலைப்பாதையில் அணிவகுத்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பண்ணாரி சோதனை சாவடி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்று ஊர்ந்து செல்கின்றது. புளிஞ்சூர் சோதணை சாவடியில் இருந்து பண்ணாரி வரை 40 நிமிடத்தில் கடக்க வேண்டிய தொலைவை தற்போது 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை இந்த பாதையை கடக்க முடிகிறது.
இதனால் தினம் தினம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். இதனால் துக்க நிகழ்ச்சி, அவசர தேவை, மருத்துவம், கல்லூரி, அரசு உழியர்கள், பணிகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எரிபொருள் தேவையும் அதிக அளவில் தேவைப்படுகிறது. அதேபோல் திம்பம் மலைப்பாதை என்பது குறைந்த அளவே எடையை தாங்க கூடிய நிலையில் கடந்த காலத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது வாகனங்கள் இடைவிடாமல் மலைப்பாதையில் நிற்பதால் அதிக பாரம் தாங்காமல் மலைப்பாதையில் விரைவில் மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டால் திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே இதற்கு நிரந்தர தீர்வை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- தமிழகம்-கர்நாடகா எல்லையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- மலைப்பகுதியில் 16 டன் எடை அளவு உடைய லாரிகள் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பகுதி 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். தமிழக-கர்நாடக இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி இருந்து வருகிறது.
இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த மலைப்பகுதியில் யானைகள், சிறுத்தை, புலி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
இந்த மலைப்பகுதியில் 16 டன் எடை அளவு உடைய லாரிகள் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீப காலமாக இந்த பகுதியில் 25 டன் வரை எடை உள்ள லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வருவதால் திம்பம் மலைப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இன்று காலையும் திம்பம் மலைப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் சாலையின் இருபுறங்களில் வாகனங்கள் பல கிலோமீட்டர் தொலைவு வரை அணிவகுத்து நின்றன. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு மிக முக்கிய காரணம் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் அளவு கொண்ட லாரிகள் இயக்க அனுமதிக்கப்படுவதே ஆகும் என வாகன ஓட்டிகள் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
வனத்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எடுத்துள்ளனர். இதன் காரணமாக தமிழகம்-கர்நாடகா எல்லையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- முருங்கப்பாக்கம் சந்திப்பு பகுதிகளில் டிரோனை பறக்க விட்டு ஆய்வு நடத்தினார்.
- டிரோன் காட்சிகளை கொண்டு முடிவு செய்ய உள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி நகரப்பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. பல இடங்களில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்ட போதிலும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.
குறிப்பாக மரப்பாலம் சந்திப்பு முதல் முருங்கப்பாக்கம் சந்திப்பு வரை உள்ள இ.சி.ஆர். சாலையில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இந்த பகுதியை கடக்க குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் ஆகிறது. அதற்கு காரணம், சாலையின் இருபுறமும் உள்ள குறுகலான தெருக்களுக்கு பொது மக்கள் கார் மற்றும் இருச்சக்கர வாகனங்களை குறுக்காக ரோட்டை மறித்து கடந்து செல்வதுதான்.
இதனிடையே சமீபத்தில் அரியாங்குப்பம், முருங்கப்பாக்கம் பகுதியில் ஆய்வு நடத்திய கவர்னரின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இங்கு சாலை விரிவாக்கம் தான் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க ஒரே வழி என்ற போதிலும் தற்காலிகமாக மாற்று ஏற்பாடுகள் செய்ய வழி உள்ளதா? என்ற ஆய்விலும் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று இரவு 7 மணிக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் மரப்பாலம் சந்திப்பு, முருங்கப்பாக்கம் சந்திப்பு பகுதிகளில் டிரோனை பறக்க விட்டு ஆய்வு நடத்தினார்.
அந்த வழியாக வரும் வாகனங்கள், எங்கிருந்து எங்கு நோக்கி செல்கின்றன? என்பன போன்ற விவரத்தை அவர்கள் பதிவு செய்தனர்.
குறிப்பாக முருங்கப்பாக்கத்தில் இருந்து கொம்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள், மரப்பாலம் சந்திப்பில் இருந்து கொம்பாக்கம் நோக்கி வாகனங்களை மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்ய முடியுமா? என்பது தொடர்பாக அவர்கள் டிரோன் காட்சிகளை கொண்டு முடிவு செய்ய உள்ளனர்.
- சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடிகள் நொறுங்கி கிடந்தது.
- மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வார இறுதிவிடுமுறை நாட்களில் சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் கிழக்கு ராஜவீதி சாலை வழியாக சென்றுதான் அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க முடியும். அதேபோல் பேருந்து நிலையம் வரும் அரசு பஸ்களும் அதே வழியாகத்தான் சென்று திரும்ப வேண்டும். ஒருவழி பாதை இல்லாததால் விடுமுறை நாட்களில் இந்த பிரதான சாலைகளில் எப்போதும் நெரிசலுடனே வாகனங்கள் ஊர்ந்து செல்லும். இந்த நிலையில் அப்பகுதியில் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடிகள் நொறுங்கி கிடந்தது. இதை விடுமுறை நாளான நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி ஊழியர்கள் பகல் நேரத்தில் சரிசெய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் போக்குவரத்து போலீசாரும் அங்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நீண்ட நேர வாகன நெரிசலுக்கு பின்னர் அந்த பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து சென்றனர். இதனால் மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
- கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- பொது மக்கள் கூட்டம் காரணமாக பேருந்துகள், ரெயில்கள் ஆகியவற்றில் கூட்டம் நிரம்பி வழிகிறது
சென்னை:
விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள், முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் புறப்பட்ட சென்றனர்.
சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் பொது மக்கள் கூட்டம் காரணமாக பேருந்துகள், ரெயில்கள் ஆகியவற்றில் கூட்டம் நிரம்பி வழிகிறது
இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்களால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.
- 55 சந்திப்புகளில் “அடாப்டிவ்” சிக்னல்கள்.
- சாலைகளில் நவீன சிக்னல்கள் அமைக்கப்படுகிறது.
சென்னை:
சென்னையில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகி வரும் மக்கள் நெருக்கமும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகிறது.
மெட்ரோ ரெயில், புதிய மேம்பாலம் போன்றவற்றின் மூலம் இதனை தீர்க்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஆனாலும் போக்குவரத்து நெரிசல் என்பது சென்னை மக்களோடு இணைந்த ஒரு செயலாகவே மாறிவிட்டது. போக்குவரத்து சிக்னல்களை மேம்படுத்தி நெரிசலை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நகரின் முக்கியமான சாலைகளில் தினமும் சிக்னலில் வாகன ஓட்டிகள் காத்து நிற்பதன் மூலமும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால் சிக்னல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதற்கு தீர்வு காண திட்டமிட்டுள்ளனர்.
சென்னையில் முக்கிய சாலைகளில் உள்ள 55 சந்திப்புகளில் "அடாப்டிவ்" சிக்னல்களை நிறுவி வருகிறார்கள். இது பழைய பாரம்பரிய சிக்னல்களை போல் அல்லாமல் தற்போதைய போக்குவரத்து நிலையின் அடிப்படையில் காத்திருப்பு நேரம் மாறும் வகையில் சரி செய்யும்.
நிலையான சிக்னல்களுடன், வாகன ஓட்டிகள் பெரும்பாலும் 60 முதல் 90 வினாடிகள் வரை அனைத்து பக்கங்களிலும் காத்திருக்க வேண்டும்.
ஆனால் புதிய 'அடாப்டிவ்' சிக்னல்கள் பரபரப்பான சாலைகளுக்கு பச்சை விளக்கை 120 வினாடிகள் வரை நீட்டிக்கலாம் மற்றும் குறைவான நெரிசல் உள்ள சந்திப்புகளுக்கு அதை 30 வினாடிகளாக குறைக்கலாம்.
பழைய மகாபலிபுரம், மவுண்ட்-பூந்தமல்லி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, கிராண்ட் டிரங்க் சாலை போன்ற முக்கிய வழித்தடங்களில் 30 சிக்னல்கலை நிறுவவும், காலாவதியான 25 சிக்னல்களை மாற்றவும் டெண்டர் விடப்பட்டுள்ளது.
தரமணி லிங்க் ரோடு-எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சந்திப்பு, நொளம்பூர் மெயின் ரோடு- பாரதி சாலை சந்திப்பு ஆகிய சாலைகளில் நவீன சிக்னல்கள் அமைக்கப்படுகிறது.
சென்னை போக்குவரத்து காவல் துறையின் இந்த திட்டத் திற்கு ரூ.11 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த சிக்னல்கள் போக்கு வரத்து தேவையை மதிப்பிடு வதற்கும் காத்திருப்பு நேரத்தை கண்டறிந்து தானாகவே மாற்றுவதற்கும் வாகனத்தை கண்டறியும் சென்சார்களை பயன்படுத்தும்.
சிக்னலை மீறுவதற்கான பொதுவான காரணம் நீண்ட நேரம் காத்திருப்பது தான். இதனாலேயே வாகன ஒட்டிகள் விரக்தி அடைந்து விதிமீறலில் ஈடுபடுகிறார்கள் என்று போக்குவரத்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்